தொலைந்த உறவுகள்

 படபடவென்று ஒரு சத்தம், கண் விழித்து பார்த்தபோது ஜன்னலோரமாக சிறகடித்துக் கொண்டிருந்தது ஒரு புறா. அப்போது தான் குளியல் முடித்து வந்த புதுமணப்பெண் போல காட்சி அளித்தாள் பூமித்தாய். என்ன ஒரு விந்தை வருடத்தில் மூன்று மாதம் மட்டும் குளித்தாலும் இவள் மட்டும் என்றும் அழகாகத்தான் இருக்கிறாள். வெளியே மழை நின்றதன் அடையாளமாக பறவைகளின் கீச் ஒலியும் மக்கள் நடமாட தொடங்கிய சத்தம் கேட்க தொடங்கியது.

“டேய் எழுந்திருடா மணி எட்டாகிவிட்டது schoolக்கு போகணும்.” அம்மாவின் குரல் கேட்ட பின்னும் போர்வையை இழுத்து தலை வரை போர்த்திகொண்டான் வேலன். வேலன் சோமுவின் ஒரே மகன், எட்டாவது படிக்கிறான்.சிறுவயது முதலே அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்ததால் அவனுக்கு அப்பாவிடம் நெருக்கம் குறைவு. இதை எல்லாம் பார்த்துகொண்டிருந்தவருக்கு தன் பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்துபோனது.

மணக்க மணக்க பில்ட்டர் காபியுடன் எதிரே நின்ற மனைவியை பார்த்து நினைவுக்கு வந்தார். ” என்ன அப்பா பையன் ரெண்டு பேருக்கும் எழுந்து கிளம்ப  ஐடியாவே இல்லையா”. இன்று சோமுவின் கம்பெனியின் ஆண்டு விழா. விழா ஏற்பாடுகள் அனைத்தையும் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது இரவு 12 ஆகிவிட்டது.

கல்லூரி படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகளில் தொடங்கிய கம்பெனி இப்போது பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டது. மனிதன் தன் வாழ்நாளில் தொலைத்துவிட்டு தேடும் விலை மதிப்பில்லா ஒரு பொருள் காலம். கம்பெனி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் வேலன் பிறந்தான். பிள்ளை பிறந்த செய்தி கேட்டு வெளியூரில் இருந்து அடித்துபிடித்து வந்தார் சோமு. சுகப்ரசவம் தாயும் சேயும் நலம். ஆஸ்பத்திரியில் வந்து பிள்ளையை கையில் எடுத்துப் பார்த்தார். ” கண்ணும் மூக்கும் அப்படியே அம்மா மாதிரி” யாரோ தூரத்து உறவினரின் குரல். இது தான் என் வாழ்வின் அர்த்தமா?? இவன் தான் கடவுள் தந்த பரிசா?. இந்த உயிரை வளர்த்து பாதுகாப்பது தான் என் வாழ்வின் முடிவா. மகிழ்ச்சியில் ஊருக்கே விருந்தளிக்க எண்ணினார், ஆனால் பாவம் சோமுவிடம் அப்போது கைசெலவுக்கு வைத்திருந்த 100  ரூபாய் மட்டுமே இருந்தது.

பிள்ளை பிறந்த இரண்டு நாட்களில் ஒரு முக்கியமான ஆர்டருக்காக சென்னை திரும்பவேண்டிய சூழ்நிலை. மனதை கல்லாக்கிகொண்டு திரும்பினார். நாட்கள் கடந்தது. நம் பிள்ளையாவது கஷ்டமில்லாமல் வளரவேண்டும் என்ற ஒரு உந்துதலால் இரவு பகல் பாராமல் உழைத்து கம்பெனியை இன்று தமிழகத்தில் தலைசிறந்த 10  கம்பெனிகளில் ஒன்றாக உயர்திருந்தார். அப்படி வளர்த்த கம்பெனிக்கு இன்று ஆண்டு விழா.

படுக்கையை விட்டு எழுந்து குளித்து முடித்து கீழே டைனிங் டேபிள்க்கு வந்தபோது மணி எட்டரை ஆகியிருந்தது. தட்டில் இருந்த இட்லி சாம்பாரை அவசர அவசரமாக சாபிட்டுகொண்டிருந்தான் வேலன். ” டேய், mobile போனை கீழ வெச்சிட்டு மெதுவா சாப்பிடேன் டா என்ன அவசரம்?”. அப்பா சொன்னதை காதில் கூட வாங்காதவனாய் இருந்தான் வேலன். தலை நிறைய மல்லிகை பூவும் பட்டு புடவையுமாக தயாராக நின்ற மனைவியை பார்த்த சோமுவுக்கு இந்த பதினைந்து ஆண்டுகளில்தான் அவள் எவ்வளவு மாறிவிட்டாள். தன் குடும்ப கடமைகளையும் சேர்த்து அவளே எல்லாமுமாக தன்னையும் வேலனையும் எவ்வளவு அழகாக பார்த்துகொள்கிறாள் ஆனால் அவளது இந்த 15 ஆண்டுகளில் தலையில் ஓரிரு வெள்ளை முடி எட்டிப்பார்த்துகொண்டிருந்தது , கண்களின் அருகே சிறு சிறு சுருக்கங்கள் அவளது முதுமையின் துவக்கத்தை பறைசாற்ற தொடங்கியிருந்தது. அன்றைய விழாவில் தான் பேசவேண்டியதை யோசித்துகொண்டே சாப்பிட்டுமுடித்து காரில் கிளம்பினர் சோமுவும் அவரது மனைவியும்.

சரியாக 10 மணிக்கு விழா துவங்கியது. முதலில் வரவேற்பு அளித்து பேசினார் மார்கெடிங் GM, பின் தலைமையுரையாற்ற வந்தார் சோமு.

” எனது அருமை தோழர்களே ! இந்த 15 ஆண்டுகளில் இரவு பகல் பாராமல் என்னுடன் இந்த கம்பெனியை இந்த உன்னத நிலைக்கு கொண்டுவர நீங்கள் மிகவும் பாடுபட்டிருகிறீர்கள். உங்கள் அயராத உழைப்பால் இன்று நம் கம்பெனி தமிழகத்தின் தலைசிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. இந்த நல்ல தருணத்தில் நான் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கிறேன். கணினி முன் அமர்ந்து காலம் நேரம் தெரியாமல் பணம், செல்வாக்கு என்று அனைத்தின் பின்னும் அலைந்து இன்று இதோ உங்கள் முன் ஒரு வெற்றிபெற்ற மனிதனாய் நிற்கின்றேன். ஆனால் இந்த 15ஆண்டுகளில் நான் இழந்து விட்டவை பல. பாசத்திற்குரிய தந்தையின் இறுதி நாட்களில் நான் அவருடன் பேசவும் நேரமில்லாமல்,  அவர் உயிர் நீத்தார். கூண்டு கிளியாய் என் மனைவியை எங்கும் அழைத்து செல்லாமல் வைத்திருந்தேன். எந்த உறவும் இல்லாமல் இன்று எல்லா வசதியுடன் உறவுகளற்ற என் மகன். இவை எல்லாம் பார்க்கும் போது நான் வந்த பாதை சரிதானா என்று ஒரு கணம் திகைக்கவைக்கிறது.

ஆகவே என் தோழர்களே இந்த ஆண்டுவிழாவில் நான் ஒரு முடிவெடுத்துள்ளேன், இன்று முதல் நம் கம்பெனியில் ஒவ்வொரு மாதமும் குடும்ப தினம் கொண்டாடப்படும், அன்று அனைவரும் உங்கள் தாய் தந்தை மன்றும் குடும்பத்துடன் வந்து கலந்துகொள்ள வேண்டும் . குழந்தைகள் விளையாட்டுத்திடல் கம்ப்யூட்டர் சென்டர் , முதியோர் நலமாய் வாழ நூல் நிலையம் என்று உருவாக்க முடிவெடுத்துள்ளேன் . மேலும் இன்றுமுதல் நான் எனது அத்தனை பொறுப்புகளையும் நமது GM திரு சேகர் அவர்களிடம் ஒப்ப்படைகிறேன். இழந்துவிட்ட என் வாழ்வின் உறவுகளை புதுபிக்கும் ஒரு புது முயற்சியில் நான் இனி என் நாட்களை கழிக்க போகிறேன்.”

பேசி முடிக்கும் பொது கண்களில் வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே தன் மனைவியின் அருகில் சென்றவருக்கு ஆனந்த கண்ணீருடன் புன்முறுவல் பூத்தாள் அவரது மனைவி. அரங்கமே அதிரும்படி கைதட்டல் ஒலித்துகொண்டே இருந்தது. ஒரு ஒளி நோக்கி தன்னையும் தன் தொழிலாளர்களையும் திருப்பிவிட்ட மகிழ்ச்சியில் காரில் ஏறினார்.