உயிரே உனக்காக அத்தியாயம் 10

உயிரே உனக்காக அத்தியாயம் 10

ஒரு நிமிடம் அதிர்ந்து போன மகேஷ் சுதாரித்துக்கொண்டாலும் அவனால் முழுவதுமாக மீண்டு வர முடியவில்லை. அவன் மனதில் இனம்புரியாத ஒரு வலியை உணர்ந்தான். “மகேஷ், ஏன் டல்லாயிட்டீங்க? நீங்களும் நித்யாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பரீங்களா? எனக்கென்னவோ நித்யாவுக்கு உங்களை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.”

“ஐயோ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அங்கிள். நித்யா என்னோடு பெஸ்ட் friend, நீங்க சொன்னபடியெல்லாம் ஒன்றுமில்லை . நித்யா எங்கிட்டே சொல்லாமல் மறைச்சிட்டாங்களேங்கிற வருத்தம்தான்.”

“சாரி மகேஷ், இந்த காலத்து பிள்ளைங்க நீங்க எவ்வளவு தெளிவாக இருக்கீங்க. நான் அதுபுரியாம காதல் அது இது என ஏதேதோ பேசிட்டேன். எதையும் மனசில வைச்சுக்காதீங்க. சரி சரி வாங்க அவங்களை தனியாவிட்டா ஒரு நாள் முழுக்க பார்த்துக்கிட்டேயிருப்பாங்க.” எனக்கூறி நித்யா இருந்த இடம் நோக்கி நடக்க தொடங்கினார். தன் நினைவு தெரிந்த நாள்முதல் மகேஷுக்கு தோழிகள் யாரும் இருந்ததில்லை.நித்யாவிடம் அதனாலோ என்னவோ அவனுக்கு ஒரு நெருக்கம் ஏற்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அவனைவிட்டு விலகியிருந்தாலும் நாளடைவில் அவனது கள்ளங்கபடமற்ற உள்ளத்தால் நித்யா ஒரு நல்ல தோழியாக பழகி வந்தாள்.

“மகேஷ் இந்த மூணு புடவையில் எது எனக்கு நல்லாயிருக்கும். நீங்க சொல்லுங்க” எனக்கேட்டாள் நித்யா. கிளிப்பச்சை வண்ணத்தில் மயில் மற்றும் மாங்காய் போன்ற சரிகை வேலைப்பாடமைந்த ஒரு சேலை அவன் கவனத்தை கவர்ந்தது. “அந்த பச்சை உங்களுக்கு நல்லாயிருக்கும் நித்யா”. அவன் சொன்னதையே பில் போடச்சொன்னார்கள்.

“மகேஷ் நீங்க ஏதோ வாங்கணும்னு சொன்னீங்களே?”

“ஆமாம் எனக்கு ஒரு formal set எடுக்கணும் ஆனால் அது இங்க வேண்டாம் பக்கத்துல ரேமண்ட்ஸ்ல பார்ப்போம் .”

மகேஷுக்கும் உடையெடுத்து முடிக்கும்போது மணி 1.30யையும் தாண்டியிருந்தது. அருகிலிருந்த உணவகத்தில் சாப்பிட்டு முடித்து நித்யாவையும் அவள் பெற்றோரையும் வீட்டில் விட்டுவிட்டு சென்றான் மகேஷ் . அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் , நித்யாவிடம் நாம்தான் உரிமையெடுத்து பழகிவிட்டோமோ? அவள் நம்மை நண்பனாகக்கூட ஏற்றுக்கொள்ளவில்லையோ?

திங்கட்கிழமை காலை பஸ் ஸ்டாண்டில் நித்யாவை சந்தித்தான் மகேஷ் . இருவரும் காரில் புறப்பட்டனர் , எஃப்எம் ரேடியோவில் ரஜினிகாந்த் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர்களிடையே இருந்த மௌனத்தை நீட்ட விரும்பாமல் ஒருவழியாக கலைத்தான் “ஏன் நித்யா உங்களை பொண்ணு பார்க்க வராங்கன்னு எங்கிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லலை?”

“அப்பாடா, நல்ல வேளை மகேஷ் நீங்களே கேட்டுட்டீங்க, இதைப்பத்தி உங்ககிட்டே எப்படி பேசப்போறேன்னு பயந்துகிட்டிருந்தேன். நல்ல வேளை அப்பாவே சொல்லிட்டார். உங்ககிட்டே சொல்லக்கூடாதுன்னு இல்லை மகேஷ், பையனைப்பார்த்து ரெண்டு வீட்டுக்கும் பிடிச்சிருந்தா முதல்ல உங்ககிட்டேதான் சொல்லியிருப்பேன். உங்களுக்கே தெரியும் முடியறதுக்கு முன்னாடி எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு அப்பறமா முடியலைன்னா நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க அதான் சொந்தத்தில் கூட யார்கிட்டேயும் சொல்லலை. நீங்க என் close friendங்கிறதால உங்ககிட்டே சொல்லியிருப்பேன்னு அப்பா நினைச்சுருப்பாங்க.”

“ஐயாம் வெரி சாரி நித்யா. இந்த விஷயத்தில் நீங்க சொல்றதுதான் சரி. ஆனா உங்களைப்பிடிக்காதுன்னு சொன்னா அவனுக்கு ஏதோ கோளாறுன்னு அர்த்தம்.”

வெட்கத்தால் ஒரு புன்னகை புரிந்தாள். “சரி பையன் பேர் என்ன? போட்டோ பார்த்தீங்களா?”

” ஹும் பேரு பரத், அம்மா போட்டோ காட்டினாங்க. பி.காம் முடிச்சிட்டு AGS ஆபிஸில் அக்கவுன்டன்டா இருக்கார். ஒரு அக்கா அவங்களுக்கும் கல்யாணமாயிடுச்சு.”

“பையனை உங்களுக்கு பிடிச்சிருக்கா?”

“தெரியலை மகேஷ், திடீர்னு இப்படி அரேஞ்ச் பண்ணிட்டாங்க. என்ன செய்யன்னு தெரியலை”

“நித்யா, ஒன்று மட்டும் நியாபகத்தில வெச்சுக்கங்க எந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னாடியும் ஆயிரம் தடவை வேணும்னாலும் யோசிச்சு முடிவெடுங்க, ஏன்னா நீங்க எடுக்கிற முடிவு உங்க வாழ்க்கையை மாத்தப்போகுது. அப்பா அம்மா என்ன சொன்னாலும் final decision உங்களோடதாயிருக்கணும்.

“ஏன் மகேஷ் அப்பாகிட்ட அப்படி என்ன பேசினீங்க? வீட்டுக்கு வந்து உங்களைப்பத்தியே பேசிக்கிட்டிருந்தார். உங்களை அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சுன்னு நினைக்கிறேன்.”

“பெருசா ஒண்ணும் பேசலை நீங்களும் நானும் லவ் பண்றோமான்னு கேட்டாங்க, நான் நாம நல்ல நண்பர்கள்ன்னு சொன்னேன்.”

“ஓ! அதான் அவங்க அப்படி புகழ்ந்து பேசிக்கிட்டிருந்தாங்களா?”

இப்படி பேசிக்கொண்டே ஆபிஸை அடைந்தனர்.

***************

“விசாலம்! விசாலம்! யார் வந்திருக்காங்க பாரு. உட்காரும்மா “என்றார் சுந்தரம். சமையலறையிலிருந்து வெளியே வந்த விசாலம் “அடடே! கயல் வா, வா வீட்டில எல்லாம் சௌக்கியமா? எங்கே அவங்க வரலை? சுகன்யா எப்படியிருக்கா?” கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனாள் விசாலம்.

“நல்லாயிருக்கோம் அண்ணி, அவங்க பிஸினஸ் விஷயமாக வந்தாங்க, அப்படியே நானும் உங்களையெல்லாம் பார்த்திட்டு கோயிலுக்கும் போயிட்டு போகலாம்னு வந்தேன். மகேஷ் எப்படியிருக்கான்? தீபாவளிக்கு வந்தானா?”

சரி உங்களை மேலும் மர்மத்தில் வைக்க விரும்பவில்லை. வந்திருக்கும் கயல்விழி சுந்தரத்தின் தங்கை, சுந்தரத்தின் பெரியப்பா மகள், பெங்களூரில் வசிக்கிறாள். அங்கு அவள் கணவன் pwd காண்ட்ராக்டர்.இனி கதைக்கு செல்வோம்.

“வந்திருந்தான் கயல், முன்னை மாதிரியில்லை, இப்பல்லாம் வேலை ஜாஸ்தியாயிடுச்சு.ரொம்ப கஷ்டப்படறான் போயி அவன்கூடவேயிருந்திடலாம்னா எனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போயிடுது. கல்யாணப்பேச்சை எடுத்தாலும் கேட்க மாட்டேங்கிறான். என்னவோ அந்த மீனாட்சி தான் கண்ணை திறக்கணும்.”

“எல்லாம் நல்லா நடக்கும் அண்ணி, உங்க நல்ல மனசுக்கு அந்த ஆண்டவன் எந்த குறையும் வைக்கமாட்டான். ஒன்ணும் கவலைப்படாதீங்க.”

“ஏன் கயல் சுகன்யாவை கூட்டிட்டு வந்திருக்கலாம்ல 6 வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது.”

“இல்ல அண்ணி கடைசி வருஷம் பாருங்க, project, campus interviewன்னு அலைச்சலாயிருக்கா. அதான் அவளை disturb பண்ணலை. அண்ணி இந்த போட்டோவில இருக்கிறது மகேஷா அது?”

“ஆமாம் கயல் அவன் நண்பர்களோட மைசூர் போனப்போ எடுத்தது.”

“நல்லா வளர்ந்து ஹீரோ மாதிரியிருக்கான்.”

இருவரும் பேசிக் கொண்டே சமையலறையினுள் சென்றனர். சுந்தரம் தொலைக்காட்சியில் செய்திகள் கேட்கத்தொடங்கினார்.

****************

புதன்கிழமை மாலை 5 மணிக்கு நித்யாவை பெண் பார்க்க வந்தார்கள். பரத், அவன் அப்பா மற்றும் அம்மா வந்திருந்தார்கள். வந்தவர்களை வரவேற்று காபியும் பஜ்ஜியும் பரிமாறினார்கள். பரத் 6 அடி உயரம் ஒல்லியான தேகம்.

“எங்களைப்பத்தி தரகர் உங்ககிட்டே சொல்லுயிருப்பார். நான் ஆறுமுகம் ரிட்டையர்ட் புரொபசர், பெஸண்ட் நகர்ல சொந்தமா வீடுயிருக்கு. எங்க சொந்தம் எல்லாம் தஞ்சாவூர், கும்பகோணத்தில் இருக்காங்க.” இவர்கள் பேச்சு நீண்டு கொண்டிருந்தது. பரத் மௌனமாக அமர்ந்திருந்தான். ஏற்கனவே நித்யாவை போட்டோவில் பார்த்திருந்ததால் அவளை நேரில் பார்க்கும் ஆவல் அதிகமாகியிருந்தது.

நித்யாவை கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஏற்கனவே நாம் வர்ணித்தவை எல்லாம் ஒரு சிறு துளி என்பது போல முழுமதியாக ஒளிவீசினாள்.அவளது நிறத்துக்கு அந்த பச்சை நிறப்புடவை மேலும் அழகு சேர்த்தது. பார்த்த மாத்திரத்தில் பற்றிக்கொள்ளும் பாஸ்பரஸாக பரத் மனது அடித்துக்கொண்டிருந்தது.

ஒரு இரண்டு நிமிடம் கழித்து பரத்தும் நித்யாவும் தனியாக பேச அனுமதித்தனர்.

ஆண்களுக்கு வெட்கம் வராது என யார் சொன்னது. அன்று நித்யாவின் அழகை கண்டு பரத் மிகவும் வெட்கத்தால் சிவந்திருந்தான்.அவளை அமரச்செய்து தானும் அமர்ந்தான் பரத்.

“எனக்கு என்ன பேசறது எப்படி பேசறதுன்னு தெரியலை! நீங்க CA முடிச்சிட்டீங்கன்னு சொன்னாங்க, future பத்தி என்ன ப்ளான் பண்ணியிருக்கீங்க.”

“எனக்கு தனியா நிறுவனம் தொடங்க ஆசை.”

“நான் AGS ஆபீஸில் அக்கவுன்ட்ஸ் ஆபிஸரா இருக்கேன். தண்ணி, தம் அந்த மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை. வாழ்க்கையில் பெருசா கனவுன்னு எதுவுமில்லை. உங்களை எனக்கு பிடிச்சிருக்கு, இனி நீங்கதான் சொல்லணும்.”

“முடிவெடுக்கறதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் பேசணும். எனக்கு CS அப்புறம் Chartered financial analyst course படிக்கணும். எங்க அப்பா அம்மாவுக்கு யாருமில்லை கல்யாணத்துக்கப்புறமா நம்மக்கூட தான் இருப்பாங்க. எனக்கு நண்பர்கள் அதிகம்.”

“சரி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கலாம் எனக்கு ok”.

“சரி எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க” என்றாள் நித்யா. பின் இருவரும் வெளியே சென்றதும் அவரவர் பெற்றோருடன் தனித்தனியே கலந்தாலோசித்தனர்.

“அப்போ நீங்க யோசிச்சு முடிவை சொல்லுங்கள், நாங்க கிளம்பறோம்” என பரத் அப்பா சொல்ல, வாசல் வரை வந்து வழியனுப்பினர்.

—-கண்களில் தோன்றி உள்ளத்தில் முடியும் காதல் என்பது பொய். உள்ளத்தில் தோன்றி உயிர்பிரியும் வரை உள்ளதே காதல்.

உயிரே உனக்காக அத்தியாயம் 9

உயிரே உனக்காக அத்தியாயம் 9

அடுத்து வந்த சில நாட்களில் மகேஷும் நித்யாவும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர், பகல் உணவு வேளைகளில் சேர்ந்து உண்டனர், மகேஷின் பெற்றோருடன் சிலமுறை அவள் தொலைபேசியில் பேசியிருந்தாள். நித்யாவின் கண்ணியம் மிக்க பெண்மை அவனை மிகவும் ஈர்த்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை மகேஷ் தனக்கு தேவையான சிலவற்றை வாங்க காரில் வெளியே கிளம்பினான்.

வழியில் பேருந்து நிறுத்தத்தில் நித்யா நின்றிருப்பதை பார்த்து காரை அருகில் சென்று நிறுத்தினான், “ஹலோ நித்யா!” என்றவன் நித்யாவின் அருகில் இருவர் நின்று தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து சற்றே அமைதியானான். “ ஹலோ மகேஷ்” அப்பா நான் சொன்னேன்ல மகேஷ் இவருதான். மகேஷ் இவரு எங்க அப்பா, இது என்னோட செல்லம் எங்க அம்மா”

“ஓ மகேஷ்! உங்களைத்தான் பார்க்கணும்னு நினைச்சிகிட்டிருந்தேன், போன ஒரு வாரமா எப்போ போன் எடுத்தாலும் மகேஷ் மகேஷ்ன்னு உங்கள பத்திதான் பெசிகிட்டிருப்பா, என் பொண்ணு இதுவரை யாரைபத்தியும் எங்கிட்ட இந்தமாதிரி பேசினதில்ல, மகேஷுக்கு இது பிடிக்காது, மகேஷுக்கு இது பிடிக்கும், மகேஷ் இப்படி செய்வாரு “

“ சிரித்துக்கொண்டே அங்கிள் எங்கே போகணும், நான் ஷாப்பிங் போயிக்கிட்டிருக்கேன் நான் வேணா ட்ராப் பண்றேன்” என மகேஷ் கூற அனைவரும் காரில் ஏறிக்கொண்டனர் “ மகேஷ் தி.நகர் போகணும்ப்பா” “சரி அங்கிள்” ”அப்புறம் மகேஷ் அப்பா அம்மா எல்லாம் எங்கே இருக்காங்க என்ன செய்றாங்க?”

“ அப்பா, அம்மா ரெண்டு பேரும் மதுரையில இருக்காங்க, அப்பா சுந்தரம் ரிட்டையர்ட் தாசில்தார், அம்மா விசாலம் எங்க வீட்டோட முதுகெலும்பு, கூட பிறந்தவங்க யாரும் இல்லை நான் வளர்ந்தது படிச்சது எல்லாம் மதுரையிலதான். இப்போ சென்னை வந்து ரெண்டு வருஷமாகுது. ஒரு சாப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்கிறேன்”

“நான் ஜஸ்ட் தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன் மகேஷ் தப்பா நினைக்கவேண்டாம்.” தன் மனைவியிடம் திரும்பி “ நம்ம கவிதா அப்பாவும் மதுரையில தானே இருக்காங்க அவங்க வீடு எந்த ஏரியா?” எனக் கேட்டார்.

“ ஆமா அவங்க திருமங்கலத்தில் இருக்காங்க,”

“Aunty எங்க வீடும் திருமங்கலத்திலதான் இருக்கு, அவங்க அப்பா பேர் என்ன, என்னவா இருக்காங்க? “

“தெரியலப்பா அவங்க நித்யாவோட மாமாவுக்கு கொஞ்சம் தூரத்து சொந்தம்”

இதற்குள் வண்டி தி நகருக்குள் நுழைந்தது, தி நகர் எனப்படும் தியாகராய நகர் இன்றைய சென்னையின் முக்கியமான வணிக பகுதிகளில் ஒன்று. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த மாம்பலம் ஜமீன்தாரின் கீழ் இருந்த பகுதிகளை இணைத்து ஜஸ்டிஸ் பார்ட்டியின் தலைவர் திரு. சர் தியாகராய செட்டி என்பவரால் 1923ல் தொடங்கி 1925ல் விளைநிலங்களை சீர்படுத்தி உருவாக்கப்பட்டது இந்த தியாகராய நகர். குடியிருப்பு பகுதியாக வடிவமைக்கப்பட்ட இது பின்னாளில் ஒரு வணிக பகுதியாக உருமாற்றம் பெற்றது. இன்று சென்னையில் ஷாப்பிங் என்று சொன்னாலே எல்லோர் நினைவிலும் வருவது தி. நகர்.

தி. நகரில் இருந்த அந்த தலைமுறைகள் கடந்த பட்டு சாம்ராஜ்யத்தின் முன் கார் சென்று நின்றது. “கடைக்குள் நுழைந்ததும் ஒரு விற்பனையாளர் முகமன் கூறி வரவேற்றார்.

“ என்ன சார் பார்க்கணும்,?”

“பட்டுப்புடவை” என்றாள் நித்யா.

“இந்த பக்கமா வாங்க சார், என்ன ரேஞ்சுல பார்க்கிறீங்க?”

“ஒரு எட்டு முதல் பத்தாயிரத்துக்குள்ள” என்றார் நித்யாவின் அப்பா.

“டேய் தம்பி பட்டுப்புடவை பத்து ரேஞ்சு தம்பி கூட போங்க சார் காண்பிப்பாங்க” என்றார்.

நித்யாவையும் அவள் அம்மாவையும் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில விட்டுவிட்டு மகேஷும் நித்யாவின் அப்பாவும், சுற்றி நகர்ந்தனர், “ அங்கிள் ஏதாவது விசேஷமா? பட்டுப்புடவை எல்லாம் வாங்குறீங்க?”

“மகேஷ் உங்களுக்கு விஷயமே தெரியாதா வர்ற புதன்கிழமை நித்யாவை பெண் பார்க்க வர்றாங்க, நித்யா உங்களுக்கு சொல்லியிருப்பான்னு நெனச்சேன்.” என்றார்.

ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தவனை பார்த்து “ என்ன மகேஷ் ஷாக் ஆயிட்டீங்க?”

“ஒண்ணுமில்லே அங்கிள்” தன் அதிர்ச்சியை மறைத்துக்கொண்டான்.

–காதல் பல அதிர்ச்சிகள் கொடுக்கும், காத்திருந்து அதிர்வோம்.

உயிரே உனக்காக அத்தியாயம் 8

உயிரே உனக்காக அத்தியாயம் 8

மௌனம் ஒரு உலகமொழி, பேராற்றல் வாய்ந்தது, உலக மாறுதல்களுக்கும் பல சமூக புரட்சிகளுக்கும் வித்தானது. சண்டையில் மௌனம் சமாதானம், ஆன்மீகத்தில் மௌனம் ஞானம், இரு உள்ளங்களின் மௌனம் புரிதலை உண்டாக்குகிறது. மகேஷ் மற்றும் நித்யாவின் மௌனத்தை சர்வர் வந்து கலைத்தார், “சார் உங்க சாப்பாடு ரெடி” அனைவரும் சாப்பிட்டு முடித்து கிளம்ப மணி 8.30 ஆனது. கடைசியாக மகேஷும் நித்யாவும் காரில் புறப்பட்டனர். காரிலும் மௌனம் தொடர்வதை விரும்பாத மகேஷ் “என்ன நித்யா அமைதியா வரீங்க?”

“இல்லை மகேஷ் ஜஸ்ட் சும்மாதான்”

“ஏன் நித்யா நீங்க சென்னை வந்து எத்தனை வருஷமாகுது?”

“ஒரு வருஷமா ஏன் கேட்கிறீங்க?”

“ இல்லை இந்த காலத்தில இப்படி ஒரு பொண்ணா? நீங்க ரொம்ப different நித்யா” ஒரு புன்னகை மட்டும் பதிலாக வந்தது.

மகேஷின் செல்போன் செல்லமாக சிணுங்கியது ப்ளூ டூத் மூலமாக காரில் இணைத்திருந்தான். அம்மாவிடமிருந்து அழைப்பு என டிஸ்ப்ளே காட்டியது.

“ஹலோ மகேஷ் நான்தாண்டா அம்மா பேசறேன், நல்லாயிருக்கியா? பிறந்தநாள் எப்படி பார்ட்டி எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா, இன்னைக்கு நானும் அப்பாவும் நம்ம மீனாட்சியம்மன் கோயிலுக்கு போயி அபிஷேகம் செஞ்சிட்டு வந்தோம்”

“நான் நல்லாயிருக்கேன் மா, எதுக்குமா கோயில்ல எல்லாம், அதுக்கு பதிலா ஏதாவது ஏழைகளுக்கு உதவி பண்ணியிருந்தா கடவுள் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்.”

“அப்படியெல்லாம் சொல்லாதே மகேஷ் ஏதோ எங்களுக்கு தெரிஞ்சது நாங்க செஞ்சோம், அப்படியாவது அந்த ஆண்டவன் கண்ணை தொறந்து எனக்கு ஒரு மருமகளை தரமாட்டானா.”

“போதும்மா, இன்னைக்குமா விட்டுடு மா முடியலை. சரி என் கூட ஒரு friend இருக்காங்க அவங்க உங்ககிட்டே பேசனுமாம்” என நித்யாவிடம் பேச சைகை செய்தான்.

அதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நித்யா சங்கோஜத்தில் நெளிந்தாள்

“ஹலோ aunty நான் நித்யா பேசறேன் நல்லாயிருகீங்களா உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்லணும் எப்படி சொல்லப்போறேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். என்ன aunty என்ன ஞாபகம் இல்லையா அன்னைக்கு ஊருக்கு போகும்போது கோயம்பேடு வரை லிப்ட் குடுத்தீங்களே” என

“நான் நல்லாயிருக்கேன்மா, நீ நல்லாயிருக்கியா, நீயும் மகேஷும் ஒரே ஆபீசில் வேலை பார்க்கிறீங்களா?”

“இல்லை aunty நான் என் கம்பெனி வேலை விஷயமா மகேஷ் ஆபீஸ்க்கு போயிருந்தேன்.”

“ சரிம்மா நான் அப்புறமா கூப்பிடுறேன் யாரோ வாசல்ல வந்திருக்காங்க” போனை துண்டித்ததும்,

“ஏன் மகேஷ் உங்களுக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்லையா?”

“ஐயோ! அப்படியெல்லாம் இல்லை நித்யா நம்பிக்கை வேறு மூட நம்பிக்கை வேறு, எங்கம்மா அது இது என ஏகப்பட்ட வேண்டுதல் செய்வாங்க, இன்னும் என் பிறந்தநாள் வேறயா சொல்லவே வேண்டாம்”

“உங்க நல்லதுக்குதானே சொல்றாங்க”

மெதுவாக இருவருக்கும் இடையில் உரையாடல் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியிருந்தது, ஆரம்பத்தில் இருந்த மிஸ். மிஸ்டர் போன்றவை காணாமல் போயின.

“கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க, நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்கிறீங்க, சாரி நான் தெரிஞ்சிக்ககூடாதுன்னா சொல்ல வேண்டாம்”.

“நோ நோ நித்யா! உங்ககிட்டே சொல்றதிலே என்ன? என் லைப்ல நிறைய ambition இருக்கு, நான் கல்யாணம்னு பண்ணா அது லவ் மேரேஜ்தான் ஒரு பொண்ண பார்க்கணும், நமக்கு பிடிச்ச பொண்ணு இவதான்னு மனசு சொல்லணும், அவ இல்லைன்னா உலகமே இல்லைன்னு தோணனும், அவளுக்காக என்ன வேணாலும் செய்யணும்னு தோணனும், அப்படி ஒரு பொண்ண பார்த்து பழகி அப்புறமா என்னோட அப்பா அம்மா முன்னாடி கொண்டுபோய் இவதான் உங்க மருமகள்னு சொல்லணும்”

அவன் பேசப்பேச அவன் ரசனையை கண்டு வியந்த நித்யா “ உங்களுக்கு வரபோற மனைவி ரொம்ப லக்கி” என்றாள். அவள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட “ நித்யா உங்களுக்கு ஓகேன்னா எங்க ஆபீஸ்ல உங்க வொர்க் முடியற வரைக்கும் என் கார்லயே வேணா வாங்களேன்.” அவள் மறுத்துவிட்டு நன்றிகூறி தன் வீடு நோக்கி நடக்க தொடங்கினாள். அவளிடம் இருந்த தன்னம்பிக்கை, கண்களில் தெரிந்த கர்வம் அவனுக்கு பாரதியின் வரிகளை நினைவுபடுத்தின

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவதில்லையாம்”

–காதல் பல கவிதைகளை தோற்றுவிக்கும் ஆற்றல் பெற்றது. கவிதை தோன்றும் வரை காத்திருப்போம்.

உயிரே உனக்காக அத்தியாயம் 7

உயிரே உனக்காக அத்தியாயம் 7

எப்படிப்பட்ட வீரனும் வாழ்க்கையில் சில நேரம் கோழையாகிவிடுகிறான். அப்படித்தான் அன்று தயங்கித் தயங்கி தன் மனதில் நிலைகொண்டிருந்த கேள்வியை கேட்டுவிட்டான் மகேஷ். “நித்யா உங்ககிட்டே ஒன்னு கேட்கணும் தப்ப நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்”.

அவனை துளைத்துவிடுவது போல தன் காந்த விழிகளால் உற்றுப்பார்த்தாள் நித்யா, பின் என்ன கேட்கபோகிறானோ என்ற பயத்தில் “ கேளுங்க மகேஷ்” என்றாள். “இன்றைக்கு ஈவினிங் நீங்க freeயா இருந்த ஒரு சின்ன பார்ட்டி இருக்கு”, முறைத்துவிடுவதுபோல் பார்த்தவளிடம் “தப்பா நினைக்காதீங்க இன்னைக்கு என்னோட பிறந்தநாள். ஆபீஸ்ல friends எல்லாம் ட்ரீட் கேட்டாங்க அதன் இங்க பக்கத்தில ஒரு ரெஸ்டாரன்ட்ல பிளான் பண்ணியிருக்கோம். நீங்க வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்றான்.

எங்கே அவன் தன் கண்ட மற்ற ஆண்களைப்போல் காதல் அது இது என்று சொல்லிவிடுவானோ என எண்ணியவள் ஒரு நீண்டபெருமூச்சுடன் “Oh! many more happy returns of the day. ஆனா பார்ட்டிக்கு என்னால வரமுடியாது, லேட் ஆயிடும் வீட்டுக்கு போக நேரமாயிடும் friends இல்லாம நான் தனியா போகணும் அதான்” என்றவளிடம், “உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நான் என்னோட கார்ல உங்கள ட்ரோப் பண்ணிடறேன் எப்படியும் அதே ஏரியா தானே” என்றான், “அப்போ அன்னைக்கு பஸ்ல வந்தீங்க அன்னைக்கு நைட் கோயம்பேட்டுக்கு கால் டாக்ஸி” எனக் கேட்டாள்.”அது அன்னைக்கு கார் ரிப்பேர் சர்வீஸ்க்கு கொடுத்திருந்தேன். உங்கள பத்திரமா வீட்ல கொண்டு சேர்க்கவேண்டியது என்னோட பொறுப்பு நம்பிக்கையோட வாங்க” என வேண்டினான்.

“நான் ட்ரை பண்றேன் மகேஷ் வேலையை பொறுத்து” என்றவளிடம், “ப்ளீஸ்” என கெஞ்ச அவளும் சரி என ஒப்புக்கொண்டாள். “நீங்க சரியாய் 6 மணிக்கு இங்க கீழே மெயின் கேட் பக்கத்தில வந்திடுங்க நான் உங்கள பிக் அப் பண்ணிக்கிறேன், அப்புறம் உங்கள எப்படி காண்டாக்ட் பண்ண உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா”

“ இல்லை உங்க நம்பர் கொடுங்க நான் கால் பண்றேன்” என்று அவன் தந்த பத்து இலக்கங்களையும் தன் மொபைல் போனில் குறித்துக்கொண்டாள்.

அவர்கள் பிரிந்ததும் “டேய், யார்ரா அந்த பொண்ணு சும்மா தேவதை மாதிரி இருக்கா?” என சிவா கேட்க “ இவதாண்டா நான் அன்றைக்கு சொன்ன பொண்ணு என்ன பஸ்ல எல்லார் முன்னாடியும் திட்டி கீழே இறக்கி விட்டுட்டா”

“டேய்! நீ ரொம்ப லக்கிடா குட்டு வாங்கினாலும் மோதிரக்கையாலே தான் குட்டு வாங்கியிருக்கே? என்ன அவமேல லவ்வா?” என கிண்டலடித்தான் சிவா.

“டேய் அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை ரொம்ப நல்ல பொண்ணுடா.”

“டேய் நான் எப்போடா அவளை கெட்டவன்னு சொன்னேன், இப்புடித்தான் சொல்வீங்க கடைசியில் எல்லாம் எங்க முடியும்னு எங்களுக்கும் தெரியும்” என வேடிக்கையாக பேசிக்கொண்டே தங்கள் இருக்கையை அடைந்தார்கள்.

சரியாக மாலை 6 மணிக்கு மகேஷும் சிவாவும் ஆபீசில் இருந்து வெளியே வந்து கார் பார்கிங்கில் இருந்த அவனுடைய பழுப்பு நிற ஸ்விப்ட் காரை எடுத்துக்கொண்டு மெயின் கேட் அருகில் வந்தார்கள், அங்கே நித்யா இல்லை, தொடர்புகொள்ள எந்த வசதியும் இல்லை, ஒரு வேளை போயிருப்பாளோ சே சே இருக்காது ஒரு பத்து பதினைந்து நிமிஷம் வெயிட் பண்ணி பார்ப்போம் என்று முடிவு செய்தனர். சரியாக 6.15க்கு நித்யா வந்தாள் “ சாரி உங்களை ரொம்ப நேரம் காக்க வெச்சுட்டேன்னு நினைக்கிறேன், கிளம்பு போது போன் பாஸ் ஒரு முக்கியமான பிளே வேணும் ஈமெயில் பண்ண சொன்னார் அதான் லேட்”

“ சாரி எல்லாம் சொல்லாதீங்க நாங்களும் இப்போ தான் வந்தோம் நாங்க நீங்க போயிட்டீங்களோ என நினைச்சோம்.” என்றான் மகேஷ். அவன் சரளமாக பொய் சொல்வதை பார்த்த சிவா ஆச்சர்யப்பட்டான். “, சரி போகலாமா” என்றபடி காரில் அமர்ந்தனர், மகேஷ் சார் ஓட்ட சிவா முன்னிருக்கையில் அமரந்து கொள்ள, நித்யா பின் இருக்கையில் அமர்ந்தாள். புறப்பட்ட ஒரு 10 நிமிடத்தில் ஒரு பெரிய ரெஸ்டாரன்ட் வாசலில் கார் சென்று நின்றது. “ முன்பே ரேசெர்வே செய்யப்பட்டதால் அவன் ஆபீசில் உடன் பணிபுரிபவர்களும் ஒரு சில நண்பர்களும் இருந்தார்கள். இவர்கள் வருவதை பார்த்து அனைவரும் வந்து மகேஷுக்கு மீண்டும் வாழ்த்துக்களை சொல்லிகொண்டனர். எல்லோரையும் தனித்தனியே சந்தித்து தன் நன்றியையும் தெரிவித்துகொண்டான் மகேஷ்.

பின்னர் கேக் கொண்டு வரப்பட்டது அனைவரும் சுற்றி நின்று வாழ்த்து பாட மகேஷ் கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தான், பின் ஆண் நண்பர்கள் பலர் யார் தேசத்தின் சிறந்த குடிமகன் என்பதை நிரூபிக்க போட்டியில் இருந்தனர். அவர்களிடம் இருந்து விலகி நித்யா அமர்ந்திருந்த இடம் நோக்கி வந்தான் மகேஷ், என்ன நித்யா ஒரே டென்ஷனா இருக்கீங்களா freeயா இருங்க என்றான். “ இந்நாட்களில் சாப்ட்வேர் IT எனப்படும் மென்பொருள் துறையில் பணியாற்றும் பலரிடம் ஒரு வித்தியாசமான வழக்கம் தோன்றியுள்ளது, மற்ற துறைகள் போலல்லாமல் இவர்கள் வேலை மேல் நாட்டை சார்ந்திருப்பதால் இவர்கள் வேலை நேரம், உணவு, பேச்சு, உடை என அனைத்தும் மாறிவிட்டது. பலர் நாகரீகத்தின் மேன்மை என இதை கருதுகிறார்கள். அனால் இவர்கள் நம் தேசத்தின் பண்பாட்டையும் தமிழர் கலாச்சாரத்தையும் பின்னுக்கு தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக எல்லோரும் அது போல் இல்லை நம் மகேஷை போலவும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி நமக்கெதற்கு இந்த தேவையற்ற பேச்சு நாம் நம் மகேஷிடம் செல்வோம்.

நித்யா சாப்பாடு ஆர்டர் பண்ணலாமா என கேட்டு ஒரு மெனு கார்டை அவல் கையில் கொடுத்தான் மகேஷ், எல்லோரும் அவர் அவர் விருப்பபடி ஆர்டர் செய்தார்கள், நித்யா மட்டும் மிகவும் யோசித்து குறைந்த அளவே சொல்லியிருந்தாள். “ நித்யா சாப்பாடு தானே ப்ளீஸ் நல்லா சொல்லுங்க இன்னும் uncomfortable பீல் பண்ணாதீங்க” என்றான்.

“ இல்லை மகேஷ் எனக்கு இது போதும் சாப்பாட்டை வேஸ்ட் பண்றது எனக்கு பிடிக்காது “. இதற்குள் ஒருவர் குடி மயக்கத்தில் நட்பை பற்றி ஒரு பாடல் பட அவர் விட்ட இடத்திலிருந்து மற்றொருவர் தொடர ஒரே பட்டும் சத்தமுமாக இருந்தது, “மகேஷ் நீங்க குடிக்கமாட்டீங்களா?” என கேட்டல் நித்யா, “ இல்லை நித்யா எனக்கு குடிக்கறது சிகரட் பிடிக்கறது இதெல்லாம் பிடிக்காது” மெதுவாக சத்தங்களுக்கு இடையில் இரு மனைகள் மட்டும் தனியே ஒன்றை ஒன்று அளந்துகொண்டிருந்தது.

–மனம் என்பது குரங்கானால் காதலில் மட்டும் ஏன் அது பிடி தளர்த்தி தாவுவதில்லை? காத்திருப்போம்.

உயிரே உனக்காக அத்தியாயம் 6

உயிரே உனக்காக அத்தியாயம் 6

இரவெல்லாம் துளிக்கூட உறக்கமில்லை நித்யாவுக்கு, ஒரு புறம் பேருந்து பயணம் மறுபுறம் மகேஷ். பொதுவாகவே அவள் பேருந்தில் பயணம் செய்யும்போது தூங்குவதில்லை. “சே! இப்படியெல்லாம் நடந்தது என்று தெரிந்தால் மத்தவங்க என்ன நினைப்பாங்க. காலையில திட்டின நானே ஈவினிங் போயி ஹெல்ப்னு நின்னோமே! என்ன இருந்தாலும் நாம அப்படி நடந்திருக்ககூடாது. சரி சரி! இத்தோட மறந்திருவோம். காலை மணி 7.30க்கு பேருந்து மதுரை சென்றடைந்தது, அழைத்துச் செல்ல அப்பா வந்திருந்தார். “என்னம்மா travel எல்லாம் வசதியாயிருந்துதா?” ஆம் ஓகேப்பா வழக்கம்போல தூக்கமே வரலை. ஆட்டோ பிடித்து இருவரும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றனர்.

“ஹலோ! அம்மா நான்தான் மகேஷ் பேசறேன். வீட்டுக்கு நல்லபடியா போய் சேர்ந்தீங்களா, ஆபீஸ்ல மீட்டிங் அதான் போன் பண்ண மறந்திட்டேன்”

“பரவாயில்லப்பா, பஸ் கொஞ்சம் லேட். உக்காந்திட்டே வந்ததுல உடம்பு வலியா இருக்குது அவ்வளவுதான். நீ சாப்பிட்டியாப்பா”

“ சாப்பிட்டேன் மா! சரி எனக்கு கொஞ்சம் நேரமாச்சு நான் ஈவினிங் கூப்பிடுறேன்” என கூறி தொடர்பை துண்டித்தான்.

நாட்கள் வேகமாய் சென்றது, இப்போதுதான் தீபாவளி வந்ததுபோல் இருந்தது அதற்குள் ஒருவாரம் ஓடிவிட்டது. தீபாவளிக்கு மதுரை சென்று அன்றுதான் பணிக்கு திரும்பியிருந்தான் மகேஷ். ஒருவாரம் விட்டு சென்ற வேலை மொத்தம் குவிந்து கிடந்தது. துளிக்கூட ஒய்வு இல்லாமல் அனைத்தையும் துரிதமாக செய்துகொண்டிருந்தான். சிவா வந்து அழைத்தபோதுதான் மதிய உணவு நேரம் என்று உணர்ந்தான். கேன்டீன் நோக்கி செல்லும்போது தூரத்து டேபிளில் அமர்ந்திருப்பது நித்யா போல தோன்றியது. தன் கண்களை தன்னாலேயே நம்ப முடியவில்லை, ஒரு வேளை இது ஏதும் கனவா என எண்ணினான். அருகில் சென்றபோது தான் அது கனவில்லை நித்யாவேதான் என தெரிந்தது.ஆவலுடன் வேறு யாரோ ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தாள், இப்போ போய் பேசலாமா எதாவது தப்பா நினைப்பாளோ? எனத் தயங்கியவனை அவள் பார்த்துவிட்டாள். சரி இனி பேசிட வேண்டியதுதான்

“ஹலோ மிஸ்.நித்யா What a surprise? என்ன எங்க கம்பெனியில” என கேட்க.

“ஹலோ மிஸ்டர். மதன்”

“நோ இ ஐயாம் மகேஷ்” என்றான்.

“Oh Sorry! மகேஷ், நீங்க இங்கேயா வேலை பார்க்கிறீங்க?

“எஸ் இங்கே தான் Senior software engineerஆ இருக்கேன்” என்றான்.

“எங்க ஆடிட் firm தான் இந்த கம்பெனிக்கு அக்கவுண்ட்ஸ் எல்லாம் பார்க்கிறோம், அண்ட் இப்போ Half yearly closure அதான் அக்கவுண்ட்ஸ் sectionல் ஆடிட் பண்ண வந்திருக்கிறோம். இவங்க என் கூட வேலைபார்க்கிறாங்க பேரு வர்ஷா” என இருவரும் பரஸ்பரம் ஹலோ மற்றும் புன்னகை பரிமாறிகொண்டார்கள்.

இவன் என் friend சிவா என அறிமுகபடுத்தினான்.

“சாரி மகேஷ் உங்கள தப்பா நினைச்சி அன்றைக்கு பஸ்ல எல்லார் முன்னாடியும் திட்டிட்டேன், ஐயம் வெரி சாரி என்றாள். அன்றைக்கு இருந்த டென்ஷன்ல ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போயிட்டேன். Thank you so much” என்றாள்.

“இட்ஸ் ஓகே! தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் இப் யூ டோன்ட் மைன்ட் உங்க கூட லஞ்ச் சாப்பிடலாமா?” என கேட்டான். அவளும் சம்மதிக்க சாப்பாடு டோக்கன் வாங்க போனான். “ என்ன நித்யா பாய் frienda?” என கேட்டாள் வர்ஷா. “சே சே அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல தெரியும் அவ்வளவுதான்” என சமாளித்தாள்.

இதற்குள் அவர்கள் டோக்கன் வாங்கிவர

“அப்புறம் நித்யா, உங்க அண்ணன் கல்யாணம் நல்லபடியா நடந்துதா?”

“Oh சூப்பர் நீங்க மட்டும் இல்லேன்னா நான் கல்யாணத்துக்கு போயிருக்க முடியாது, அம்மா எப்படி இருக்காங்க? நான் expect பண்ணவேயில்லை சென்னைல இந்த காலத்துல லேட் நைட்ல கொட்டற மழையில ஒருத்தர் முன்னேபின்னே தெரியாத பொண்ணுக்கு டாக்ஸியில லிப்ட் கொடுத்தாங்கன்னா அம்மா ரியல்லி கிரேட். நான் ரொம்ப தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுங்க” என்றாள்.

“அம்மா அப்படித்தான் யார் எப்போ ஹெல்ப் கேட்டாலும் முடியாதுன்னு சொல்லவே மாட்டாங்க”

“அம்மா மட்டுமா நீங்களும்தான்.”

பதிலுக்கு ஒரு வெட்கப்புன்னகை புரிந்தான் மகேஷ்.

அவளிடம் பேசும்போது மகேஷுக்கு என்னவோ இந்த உலகத்திலேயே இல்லாதது போலவும் தன் ஆபிஸும் கேன்டீனும் புதியதாய் தோன்றியது. இந்த உணவு இடைவேளை இப்படியே நீண்டுவிடக்கூடாதா எனப்பட்டது. ஆனால் நாம் நினைப்பது எதுவும் நடப்பதில்லை. சாப்பிட்டுமுடித்து நித்யாவும் வர்ஷாவும் எழுந்தனர். எப்படி கேட்பது என்ன சொல்வாள் சம்மதிப்பாளா முடியாது என்ன சொல்லிவிடுவாளோ மனதில் ஒரு பயம். கடைசியில் துணிந்து கேட்டே விட்டான்,

–எதிர்பாராத கேள்வியும் பதிலும் தான் காதலில் சுவாரஸ்யம், பதில் தெரிய காத்திருப்போம்.

உயிரே உனக்காக அத்தியாயம் – 5

உயிரே உனக்காக அத்தியாயம் – 5

” சார்! என்ன சாப்பிடறீங்க, என்ன வேணும் ? சூடா சாதா தோசை, மசாலா தோசை, ஊத்தப்பம், சப்பாத்தி, பரோட்டா இருக்கு” நித்யாவை பார்த்தவனுக்கு “காபி மட்டும் போதும்” என்றாள். “2 காபி குடுங்க” என்றான். சர்வர் கிளாசில் தண்ணீரை ஊற்றி விட்டு அகல, தயங்கி தயங்கி “உங்க பேரு என்னனு சொல்லவேயில்லை” என்றாள். “Oh I am sorry. என் பேரு மகேஷ், இங்கதான் சென்னையில் இரண்டு வருஷமா ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் Sr. Software Engineerஆ வேலை பார்க்கிறேன். சொந்த ஊர் மதுரை. அப்பா அம்மா எல்லாம் மதுரையில் இருக்காங்க. உங்களைப்பற்றி தெரிஞ்சுக்கலாமா?” என்றான்.

“என்னை பத்தி பெருசா ஒண்ணுமில்லை. நித்யா CA முடிச்சிட்டு இங்கே ஒரு ஆடிட்டர் ஆபிஸில் வேலை பார்க்கிறேன். ஊர் தஞ்சாவூர் , இப்போ அண்ணன் கல்யாணத்துக்கு மதுரைக்கு போறேன்.” என்றாள்.

இதற்குள் காபி வந்துவிட இருவரும் அமைதியாக காபி குடித்தனர். பில்லுக்கு காசு கொடுத்து வெளியே வரும்போது தூறல் மீண்டும் தொடங்கியது.நேரமாகியதால் அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

கடிகாரம் மணி 11 எனக்காட்டியது. நாளைக்கு காலையிலே ஆபிஸில் client உடன் மீட்டிங் இருந்தது நினைவுக்கு வரை ஆட்டோ பிடித்து கிளம்பினான். ஆட்டோவில் மழைச்சாரல் இரண்டு பக்கத்திலிருந்துஇம் வந்து கொண்டிருந்தது. முழுவதும் நனைந்துவிட்டான். வீட்டுக்கு வந்து தணி மாற்றி படுக்கைக்கு வரை 12 ஆனது. ஏனோ அவனுக்கு உறக்கமே வரவில்லை. அம்மா ஊருக்கு கிளம்பியதா இல்லை அன்று நடந்த நிகழ்வுகளா என்ற சிந்தனை மனதில் ஓடியது. மனக்கண்ணில் நித்யாவின் முகம் மீண்டும் மீண்டும் வந்தது. நெடுநேரம் புரண்டு புரண்டு எப்போது தூங்கிப்போனான் என்று அவனுக்கே தெரியாது.

கண்விழித்து பார்த்தபோது மணி 7ஐத் தாண்டியிருந்தது. 9.30மணிக்கு மீட்டிங், அவசரஅவசரமாக குளித்து கிளம்பும் போது மணி 8.30. இனி பஸ்ஸுக்கு வெயிட் பண்ணினா லேட் ஆயிடும் அதனால ஆட்டோவிலே போயிடலாம் என் எண்ணி ஆட்டோ ஸ்டான்ட் நோக்கி நடந்தான். பாதி தூரம் வந்தபோதுதான் presentation இருந்த pen driveவீட்டிலேயே மறந்துவிட்டது தெரிந்தது. இனி திரும்ப வீட்டுக்கு போனால் மீட்டிங்கிற்கு லேட் ஆயிடும். லேப்டாப் ஆன் செய்து பழைய presentation எடுத்து திருத்தங்கள் செய்யலானான். மகேஷின் திறமையே இதுதான் எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பான். ஒருவழியாக அவன் முடிக்கவும் ஆபிஸ் வரவும் சரியாகயிருந்தது. ஆட்டோவிற்கு காசுகொடுத்துவிட்டு ஆபிஸில் தன் இருக்கை நோக்கி வேகமாக நடந்தான்.

“டேய், என்னடா இன்னைக்கு புதுசா லேட்டா வர ? மேனேஜர் உன்னை தேடிகிட்டு இருக்கார்” என்றான் சிவா. “சிவா! உன் pen drive கொஞ்சம் தாடா என்னோடதை மறந்திட்டேன்” “என்னடா நீ மறந்திட்டியா presentation ரெடி தானே? சரி சரி டைம் ஆயிடுச்சு நீ மீட்டிங்கிற்கு போல நாம அப்புறம் பேசுவோம் ” என்றான் சிவா.

மேனேஜரை சந்தித்து presentationஐ காண்பித்தான். அதை பார்த்துவிட்டு அவரும் பாராட்டினார். சரியாக 9.30க்கு வீடியோ கான்பரன்ஸ் தொடங்கியது. மகேஷின் presentation பார்த்த அந்த வெளிநாட்டு கம்பெனியினர் மிகவும் திருப்தியடைந்தனர். மீட்டிங் முடித்து தன் சீட்டிற்கு வந்த மகேஷை பார்த்த சிவா “சரி வா கேன்டீனுக்கு போகலாம்” என்றான். நண்பர்கள் இருவரும் கேன்டீனுக்கு நடக்க தொடங்கினர். “அம்மா ஊருக்கு போயிட்டாங்களா? போன் பண்ணியா, என்னாச்சு காலையிலே லேட் presentation இருக்கிற pen drive மறந்திருக்கே? என்ன விஷயம்? ” என்றான் சிவா. முன்னாள் நடந்த அனைத்தையும் தன் நண்பனிடம் பகிர்ந்து கொண்டான் மகேஷ். “டேய்! என்னடா சொல்றே, என்ன அந்த பொண்ணை பார்த்ததும் கண்டதும் காதலா?” என் சிவா கேட்க நித்யாவின் முகம் மகேஷின் நினைவுக்கு வந்தது.

“ஐயோ! அம்மா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டாங்களான்னு கேட்க மறந்துட்டேன”் என அலறினான்.

காதலில் காதலியை தவிர மற்றதை மறப்பதே சொர்க்கம். காத்திருங்கள் நினைவுகள் இனி மறக்கும்.

உயிரே உனக்காக அத்தியாயம் – 4

உயிரே உனக்காக அத்தியாயம் – 4

தன் நிலையை விளக்க ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்ட சோகத்துடன் பேருந்து நிலையத்தில் நுழைய தொடங்கினான் மகேஷ். சார் என்றபடி பின்னால் இருந்து யாரோ தோளை தட்ட திரும்பியவனுக்கு கார் டிரைவர் “ சார், அம்மாவோட போன்னு நினைக்கிறன் கார்ல கிடந்துச்சு” என தர வாங்கிப்பார்த்தவனுக்கு அது நித்யாவின் போன் என தெரிந்தது. மறுபடியும் அவளை பார்த்து தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை தீர்க்க ஒரு வைப்பு தந்த டிரைவருக்கும் கடவுளுக்கும் ஒரு நன்றி சொன்னான். சரி, இனி முதலில் அம்மாவை பஸ் ஏத்தி விடனும் பிறகு அவளை தேடி போனை தருவோம், இடையில் கால் வந்தால் நாம் இருக்கும் இடத்திற்கு வரச்சொல்லி தருவோம் என முடிவெடுத்தான்.

ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் தீபாவளி நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அலை மோதியது. “என்ன கூட்டம்ப்பா இது! நல்லவேளை நாம முன்னாடியே பதிவு பண்ணதால சரியாய் போச்சு இல்லைனா?” என்றாள் விசாலம். தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து அம்மாவை பஸ்ஸில் உட்காரவைத்தான் . “ சரிப்பா நீ கிளம்பு நேரமாச்சு நாளைக்கு ஆபீஸ் போகணும்”. இல்லம்மா பஸ் கிளம்பட்டும் நான் போயிக்கிறேன் “ என்றான் மகேஷ். சரியாக 10 மணிக்கு பஸ் புறப்படத்தயாரானது.

இதுவரை அவளது கால் ஒன்றும் வரலை, டென்ஷன்ல மறந்திருப்பாளோ? சரி ஒரு முறை பஸ் ஸ்டாண்ட்ல சுத்தி தேடிப்பார்ப்போம், இல்லேன்னா அவ வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லிடுவோம் என பேருந்து நிலையத்தை வலம் வரத் தொடங்கினான். சே! என்ன ஊருடா இது எங்கே பார்த்தாலும் ஒரே கூட்டமும் நெரிசலும், தீபாவளிக்கு இன்னும் நாலு நாள் இருக்கு அதுக்குள்ளே இப்படியா.

நித்யாவோ லேட்டாக வந்ததால் பேருந்தை தவறவிட்டு அந்த தனியார் பேருந்து நிலைய ஊழியரிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.

“என்ன நீங்க இப்படி கொட்டற மழையில ஒரு 10 நிமிஷம் லேட்டாயிடுச்சு அதுக்குள்ள பஸ்ஸ எடுத்திட்டீங்க”

“மேடம்! அது எங்க தப்பேயில்லை கூட்டத்த பார்த்தீங்களா இன்னைக்கு மட்டும் 40 ஸ்பெஷல் பஸ் ஆப்பரேட் பண்றோம். நீங்க ஒரு ½ மணி நேரம் முன்னாடி வந்திருக்கணும். அதுவுமில்லாம நாங்க உங்களுக்கு போன் பண்ணோம் நீங்க எடுக்கவே இல்லை.” என்றான்.

அப்போதுதான் தன் செல்போன் எங்கே என தேடத் தொடங்கினாள் நித்யா. அன்று நாள் முழுவதும் சரியில்லாத வெறுப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது. கடைசியாக காரில் ஏறும் முன் வீட்டிற்கு பேசிய ஞாபகம். தன் விதியை நொந்தவளாக “ “செல்போன் தொலஞ்சிடுச்சி எப்படியாவது வேற பஸ்ல சீட் கொடுங்க” என கெஞ்சினாள்.அவர்கள் மறுக்க செய்வதறியாமல் திகைத்து நின்றுகொண்டிருந்தாள்.

அதற்குள் மகேஷின் கண்களில் அவள் தென்பட அருகில் வந்தவன் “ எக்ஸ்க்யூஸ் மீ! மிஸ். நித்யா, இது உங்க போனான்னு பாருங்க” என தர கையில் வாங்கி பார்த்தவளுக்கு உயிர் மூச்சே வந்ததுபோலவும் மகேஷ் ஆபத்பாந்தவனாக தெரிந்தான். “ கார்ல மிஸ் பண்ணிடீங்கனு நினைக்கிறன் டிரைவர் கொண்டு வந்து என்கிட்டே கொடுத்தார்.” கண்களில் நீர் மல்க “தேங்க்ஸ்” என்றாள். “நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒன்னு சொல்லணும் இன்னைக்கு காலையில நடந்ததுக்கு எதுக்கும் நான் சம்பந்தம் இல்லை. கூட்டத்துல யாரோ செய்ய நீங்க நான்னு தப்ப நினைச்சிருக்கீங்க.” என்றான் மகேஷ். அவன் பார்வையும் நேர்மையும் மனதில் ஒரு தைரியம் தர “ஹும்!” என்றாள்.

இவனிடம் இப்போ உதவி கேட்டு பார்க்கலாமா, தேவையில்லாமல் அட்வான்டேஜ் எடுத்துக்குவானோ என யோசித்துகொண்டே “ If you don’t mind ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? ப்ளீஸ்.” என்றாள். தன் மீது அவளுக்கு சிறிது நம்பிக்கை வர இது தான் தருணம் என்று “ Sure சொல்லுங்க” என்றான். “ பஸ் மிஸ் ஆயிடுச்சு, நான் அவசரமா மதுரை போகணும், டிக்கெட் கிடைக்க ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா? இந்த டிராவல்ஸ் முடியாதுனு சொல்றாங்க.”

உடனே தன் செல்போன் எடுத்து தன் ஆபீஸ் டிராவல் டெஸ்க் போன் செய்தான். அவன் கம்பெனியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக Employee of the year அவார்ட் வாங்கியிருந்ததால் எல்லோருக்கும் இவன் மீது ஒரு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது. மறுமுனையில் ஆபீசில் ராஜீவ் என்பவர் போன் எடுக்க “ Mr.ராஜீவ், நான் மகேஷ் பேசறேன் ஒரு சின்ன ஹெல்ப் வேணும், என்னோட வெரி close friend அவசரமா மதுரை போகணும் ஒரு எமேர்கேன்சி டிக்கெட் கிடைக்கமாட்டேங்குது. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன் என.” அடுத்த ஐந்தாவது நிமிடம் போன் வந்தது, “ சார், நீங்க மாருதி டிராவல்ஸ் ஆபீஸ்க்கு போங்க நான் பேசிட்டேன், என்னோட பேரையும் நம்ம கம்பெனி பேரையும் சொல்லுங்க டிக்கெட் குடுப்பாங்க” என்றார். இருந்த இடத்திலேயே 5 நிமிடத்தில் தன் எல்லா பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வந்த ஆச்சர்யத்தில் அவன் பின்னால் ஆடு போல டிராவல்ஸ் ஆபீஸ் நோக்கி நடக்க தொடங்கினாள்.

டிக்கெட் வாங்கியதும் இரவு 11.30க்கு தான் பஸ் என தெரிந்தது. “Ms.நித்யா நீங்க சாப்பிட்டீங்களா” என்றான் அவனிடம் மேலும் உதவி எதிர்பார்ப்பது தவறு என எண்ணி “எஸ் சாப்பிட்டுட்டேன்” என்றாள். “பஸ் வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்குது உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைனா ஒரு கப் காபி சாப்பிடலாமா?” பசி வேறு வயிற்றை கிள்ள சரி எனத் தலையாட்டினாள்.

–காதலில் ஒரு நேரம் எதிரியாக தோன்றியவன் நெருக்கமாகிறான். காபி தயாராகும் வரை காத்திருங்கள்.

உயிரே உனக்காக அத்தியாயம் 3

உயிரே உனக்காக அத்தியாயம் 3

நெடுநேரமாகியும் மழை நிற்காததால் வேறு வழியின்றி நனைந்து கொண்டே வீடு நோக்கி நடக்க தொடங்கினான் மகேஷ். வாசலிலேயே அம்மா காத்துக்கொண்டிருந்தாள். “என்னப்பா இது இப்படி தொப்பலா நனைஞ்சு போய் வந்திருக்கியே குடை கொண்டு போகக்கூடாது? சரி சரி சீக்கிரம் போய் துணியை மாத்திட்டு வா, நான் காபி எடுக்கிறேன் ” என்றாள் விசாலம். “அதெல்லாம் வேண்டாம் மா, மணியாச்சு நான் துணி மாத்திட்டு கால்டாக்ஸி கூப்பிடறேன், நீ கிளம்பு” என சொல்லிவிட்டு தன் அறை நோக்கி நடந்தான்.

உடை மாற்றி தலை துடைத்து கிளம்ப மணி 8.30ஆனது. வாசலில் கால்டாக்ஸி ஹார்ன் சத்தம் கேட்டது. “அம்மா! மாத்திரை எல்லாம் எடுத்துக்கிட்டியா? ” “எல்லாம் எடுத்தாச்சு. நீ வேளைக்கு சாப்பிடு, உடம்பை பார்த்துக்கோ, அப்புறம் நான் சொன்னதை யோசிச்சு பாரு, வயசாயிட்டே போகுது. நிறைய சம்மந்தம் வருது நாங்க போட்டோ அனுப்பறோம் பார்த்து சொல்லு” என்றாள். இது எதையும் காதிலே வாங்காதவனாய் பையை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தான் மகேஷ்.

டாக்ஸியில் வழியெல்லாம் அம்மாவின் அதே கல்யாணப்பேச்சு. தன் பெற்றோரை எதிர்த்து இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை மகேஷ் அதனால் அமைதியாக இருந்தான். அவன் தாயை போல வானம் தன் மொத்த குமுறலையும் கொட்டித்தீர்த்துக்கொண்டிருந்தது. சிக்னலில் யாரோ ஒரு பெண் வந்து “அம்மா ரொம்ப நேரமாக wait பண்றேன் பஸ்ஸே வரலை, நான் ஊருக்கு போகணும் வழியில் ஏதாவது ஆட்டோ ஸ்டாண்ட்லே இறக்கி விடறீங்களா? “என கெஞ்சினாள். அவள் நிலை கண்டு விசாலம் “சரி ஏறிக்கோ மா” என்றாள். முன் இருக்கையில் அமரந்த பின் தான் பின்னால் இருந்த மகேஷை அடையாளம் கண்டாள். இனி என்ன செய்ய இறங்கி விடலாமா, நேரம் வேறு ஆகிவிட்டது என எண்ணுவதற்குள் சிக்னல் மாறி வண்டி நகரத்தொடங்கியது. இதற்குள் “எந்த ஊருமா நீ ? உன் பேர் என்ன? “என்ற விசாலத்தின் குரல் கேட்டு தன்னையறியாமல் ” பேர் நித்யா ஊர் தஞ்சாவூர், இப்போ அண்ணன் கல்யாணத்துக்கு மதுரை போறேன் ” என்றாள். அட! நானும் மதுரைக்குத் தான் போறேன் ” என்றாள் விசாலம். தன் கல்யாணப்பேச்சிலிருந்து தப்பித்த உணர்வுடன் நித்யாவையும் அன்றைய நிகழ்வுகளையும் நினைத்து கோயம்பேடு சென்றதும் நடந்தவற்றை அவளிடம் சொல்ல முடிவெடுத்தான். ஆனால் கோயம்பேடு வந்ததும் நித்யா அவசரஅவசரமாக விசாலத்திடம் நன்றி சொல்லி நடந்தாள்.

“ஹும்! எனக்கு எப்போ இப்படி ஒரு மருமகள் வரப்போறாளோ? ” என விசாலம் சொல்வதை கேட்டு நித்யாவிடம் நடந்த உண்மை சொல்ல தேடினான், அவளோ மின்னலென கூட்டத்தில் மறைந்தாள்.

காதலும் மின்னல் போல தான் ஒரு நிமிடத்தில் தோன்றும் நனைய காத்திருங்கள் இனி காதல் மழை.

உயிரே உனக்காக அத்தியாயம் 2

உயிரே உனக்காக அத்தியாயம் 2

மகேஷ் 6 அடி உயரம், ஆஜானுபாகுவான உருவம், அப்பா ரிட்டையர்ட் தாசில்தார், ஊர் மதுரை, படித்தது BE Comp. Science, வீட்டிற்கு ஒரே பிள்ளை ஆனாலும் கண்டிப்பான வளர்ப்பு. இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் வித்தியாசமானவன். படித்து முடித்த கையோடு மாதம் அறுபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சென்னைக்கு வந்தவன், இந்த இரண்டு ஆண்டுகளில் உயர்ந்து மாதம் ஒன்றரை இலட்சம் வாங்குகிறான். ஆனாலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லை, சொக்கத்தங்கம் .

“டேய்! மகேஷ், என்னடா டல்லா இருக்கே?” என்று நண்பன் சிவா கேட்டான். சிவாவும் மகேஷும் கல்லூரி நண்பர்கள். இருவரும் ஒன்றாக வேலைக்கு சேர்ந்தனர். ” இல்லடா, இன்னைக்கு பஸ்லே ஒரு பொண்ணு எல்லார் முன்னாடியும் திட்டி கீழே இறக்கிவிட்டுட்டாடா. நான் ஒண்ணுமே செய்யலே”.

“இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு தைரியம் ஜாஸ்திடா, அதையே நினைச்சிக்கிட்டிருக்காதே, வா ஒரு காபி சாப்பிடலாம்”. காபி குடித்து அலுவலக வேலைகளில் மும்முரமானார்கள் நேரம் போனதே தெரியவில்லை. மாலை மணி ஆறு மணியைத் தாண்டியது.

“டேய், இன்னைக்கு நம்ம ரகு farewell டா, நீ வரலை?” என்றான் சிவா. ” இல்லைடா அம்மா ஊருக்கு கிளம்பறாங்க பஸ் ஏத்திவிடனும், நீ போ நானும் வீட்டுக்கு கிளம்பறேன்”.

தீபாவளி வாரம் என்பதால் பஸ் மிகவும் கூட்டமாக இருந்தது. மூன்று நான்கு பஸ்கள் சென்றும் கூட்டம் குறையவில்லை. நேரமாகி கொண்டிருந்ததால் வேறு வழியில்லாமல் அடுத்து வந்த பஸ்ஸில் ஏறி சைதாப்பேட்டைக்கு டிக்கெட் வாங்கி ஒரு ஓரமாக கம்பியை பிடித்து நின்றான்.

அவன் சிறுவயது முதல் இது போல யாரிடமும் திட்டு வாங்கியதில்லை. அதனால் அவனை திட்டிய நித்யாவின் முகம் மட்டும் மறக்கவேயில்லை. அவன் இறங்கும் இடம் வந்ததும் இறங்கி வீடு நோக்கி நடக்க தொடங்கினான், வழியில் பழமும் அம்மாவுக்கு மாத்திரையும் வாங்கினான், சட்டென்று மழை படபடவென்று வரத்தொடங்கியது, வேறு வழியில்லாமல் ஒரு கடையோரமாக ஒதுங்கினான்.

—-காத்திருங்கள் காதலில் அதுவே சுகம்.

உயிரே உனக்காக அத்தியாயம் – 1

உயிரே உனக்காக அத்தியாயம் – 1

செருப்பு பிஞ்சிடும்! சத்தம் கேட்டு சுற்றியிருந்தவர் அனைவரும் பார்க்க சற்றே வெளிறிய முகத்துடன் ” மேடம்! யாரைப்பார்த்து சொல்றீங்க? என்றான் மகேஷ். ” உன்னைத்தான், செய்யறதை செஞ்சிட்டு கேள்வி வேறயா?” கோபத்தின் உச்சியில் இருந்தாள் நித்யா. ஏன் எதற்கு என்று தெரியாமல் அவமானத்தில் வெளிறி நின்றான் மகேஷ்.

Officeக்கு லேட் ஆன டென்ஷனில் கூட்டத்தில் வந்த பேருந்தில் அடித்து பிடித்து ஏறும்போது யாரோ ஒரு கோனல் ஆசாமி நித்யாவின் இடையில் கை வைத்து செய்த சேட்டையின் விளைவு தான் மகேஷ் அவமானப்பட காரணம். நித்யாவின் புகார் கேட்டு பாதி வழியில் இறக்கிவிடப்பட்டான் மகேஷ்.

நித்யா பார்ப்பவரை மயக்கி வசீகரித்து இழுக்கும் அழகு. உயர்ந்து வளைந்த வானவில் புருவம். அவற்றின் கீழே சொக்க வைக்கும் திராட்சை கண்கள் . சிறிய மிளகாய் போல கூரான நாசி. உலகில். உள்ள எல்லா சிவப்பையும் சேர்த்து வார்த்த உதடுகள்.அவற்றின் இடையில் நானும் இருக்கிறேன் என்று அவ்வப்போது எட்டிப்பார்க்கும் வெண் முத்துப்பற்கள். நாள் முழுதும் பளிச்சென்றிருக்க கடவுள் படைத்த காற்று உற்பத்தி செய்யும் கருங்கூந்தல். நிறம், சுண்டினால் இரத்தம் வரும் சிவப்பு. வளைந்து நெளிந்த இடை. ஒரு  ஐந்துஅடி உயரம். இன்னும் இன்னும் இரண்டாயிரம் பக்கங்கள் எழுதினாலும் தீராத ஒரு அழகு.

பெண்கள் நான்கு வகை

  1. அழகுண்டு அறிவில்லை
  2. அறிவுண்டு அழகில்லை
  3. அழகு அறிவு இரண்டும் இல்லை

ஆனால் நித்யா நான்காம் வகை அழகா இல்லை அறிவா என்று பட்டிமன்றம் நடத்தலாம், ஒன்றை மிஞ்சும் மற்றொன்று என கடவுள் பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை படைத்த ஒரு அற்புதம் அவள்.

பல கதைகளை போல நித்யாவின் அப்பா ஒரு தமிழ் ஆசிரியர். பெயர் வடிவேலன். கொடுத்து வைத்தவர், அழகான தமிழை தாயாகவும் அதேபோல அழகியமகளையும் பெற்றருக்கிறார். சிறுவயது முதலே தமிழும் தமிழர்பண்பாட்டையம் உணர்த்தி வளர்த்தியிருந்தார்.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும்.”

என்ற குறளுக்கு உவமையாக நித்யாவை சொல்லாம். படித்தது CA, பணிபுரிவது பன்னாட்டு நிறுவனம், சென்னையின் முக்கிய பகுதியில் அலுவலகம். சரி நித்யாவின் வயதென்ன? என்ற கேள்வி வருகிறதா? பெண்ணின் வயதை பற்றி பேசுவது அநாகரீகம் என்பதால் அதை விடுப்போம்.

ஐயோ! பாதியில் இறங்கிய மகேஷ் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

—காத்திருங்கள்! விரைவில் சந்திப்போம்.